கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அருகே சாக்கடையில், அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் கிடந்த ஆண் சடலம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சடலத்தை போலீசார் மீட்டனர். பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சடலமாக மீட்கப்பட்டது மதுக்கரை, சீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பாலுசாமி என்பது தெரியவந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பாலுசாமி, வீடு திரும்பாததால் அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீசாரின் விசாரணையில், பாலுசாமியின் கொலைக்கு கள்ளக்காதல் தான் காரணம் என்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பாலுசாமி உல்லாசமாக இருந்துள்ளார்.
ஆனால், அதற்குரிய பணத்தைக் கொடுக்க மறுத்ததால், அந்தப் பெண் ஆத்திரமடைந்துள்ளார். பின்னர், அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த மகாலிங்கம் என்பவரிடம், பாலுசாமி குறித்து கூறியிருந்தார். இதையடுத்து, மகாலிங்கம் பாலுசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, இருவருக்கும் கைகலப்பு ஏற்படவே, ஆத்திரமடைந்த மகாலிங்கம் அங்கிருந்த கல்லைத் தூக்கிப் பாலுசாமியின் தலையில் போட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர், பாலுசாமியின் உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி, சுந்தராபுரம் சாக்கடையில் தூக்கி வீசியுள்ளார். இந்நிலையில், தலைமறைவாக உள்ள மகாலிங்கம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அந்தப் பெண்ணையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



