வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளம்பெண் ஒருவர், அழகுக்கலை நிபுணராக உள்ளார். திருமணமான இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், இவர் தனது அழகுக்கலை பயிற்சி தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், காட்பாடி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (30) என்பவர் அந்தப் பெண்ணுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டு பழகியுள்ளார். நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதல் உறவு ஏற்பட்டுள்ளது. அப்போது, இளம்பெண்ணும் யுவராஜூம் நெருக்கமாக இருந்த காட்சிகளைத் தனது செல்போனில் புகைப்படங்களாக எடுத்து வைத்திருந்தார்.
இந்த சூழலில், அந்த இளம்பெண்ணுக்கு விக்ரம் (34) என்பவருடன் மற்றொரு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில், விக்ரம் அந்தப் பெண்ணின் செல்போனை பார்த்து, அதில் யுவராஜூடன் அவர் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், அந்தப் புகைப்படங்களை யாருக்கும் தெரியாமல் தனது செல்போனுக்கு அவர் அனுப்பிக்கொண்டார்.
பின்னர், விக்ரம் அவ்வப்போது இளம்பெண்ணிடம் செலவுக்காக பணம் மற்றும் தங்க நகைகளைப் பெற்று வந்துள்ளார். இதையறிந்த அப்பெண்ணின் கணவர், விக்ரமை தட்டிக் கேட்டு, நகை மற்றும் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், இளம்பெண்ணின் கணவர் பரதராமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விக்ரமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் விக்ரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் உடனடியாக அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, ஏற்கனவே அவர் யுவராஜூடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அனுப்பி வைத்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மீண்டும் விக்ரமை கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.