மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், தேமுதிகவை நிறுவிய மறைந்த நடிகரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்தைக் குறிப்பிட்டு பேசிய தவெக தலைவர் விஜய், “நான் மதுரை மண்ணில் கால் எடுத்து வைத்ததும் ஒரே ஒருத்தரை பற்றிதான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அவர் யார் என்று உங்களுக்கும் தெரிந்திருக்கும்.
சினிமா என்றாலும் அரசியல் என்றாலும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது எம்.ஜி.ஆர் தான். அவரோடு பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவர் மாதிரியே குணம் கொண்ட என் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகுவதற்கு நிறையவே வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே.. அவரை மறக்க முடியுமா?” என்று பேசினார்.
இது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக இருந்த நிலையில், விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “விஜய்யை அப்பா சிறுவயதிலிருந்தே பார்த்து வந்தார். அதனால் அவர்களுக்குள் ஒரு நெருக்கம் உண்டு. அப்பாவை விஜய் எப்போதும் அப்படி தான் அழைப்பார். இதில் பெரிதாக எதையும் பார்க்க வேண்டியதில்லை.
அப்பா எப்போதும் மக்களின் சொத்துதான். அவரை அண்ணன் என்று சொன்னது ஒரு பாசத்தோடு கூறப்பட்ட வார்த்தை மட்டுமே” என்று சண்முக பாண்டியன் தெரிவித்தார். முன்னதாக இதுகுறித்து பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், விஜய் எங்களுக்குத் தம்பி தான். இன்றைக்கு அரசியலுக்கு வந்ததால் அண்ணன் தம்பி என்று இல்லை. விஜயகாந்த் சினிமா துறையில் காலடி வைத்ததிலிருந்து இன்றைக்கு வரைக்கும் அந்த நட்பு அப்படியே தொடர்கிறது. விஜய்யின் படத்துக்கு கூட விஜயகாந்த்தை ஏஐ மூலம் பயன்படுத்த அனுமதி கொடுத்தோம் என்றார்.