காஞ்சிபுரம் மாநகராட்சியைச் சேர்ந்தவர் தேவிகா (29). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் என்பவரை காதல் திருமணம் செய்து, ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். கணவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால், 7 ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த காலகட்டத்தில், அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
2020ஆம் ஆண்டு, தேவிகா பணியாற்றிய நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்த சரத்குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. திருமணமாகி விட்டதாக தேவிகா கூறியபோதும், சரத்குமார் அவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி வந்துள்ளார். வாட்ஸ்அப் மூலம் இவர்களின் நட்பு காதலாக மாறவே, இருவரும் ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர், இருவரும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில், தேவிகா கர்ப்பமடைந்தார். அப்போது, கருவைக் கலைக்க வேண்டும் என சரத்குமார் வற்புறுத்தியுள்ளார். ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தேவிகாவுடன் பேசிய சரத்குமார், மறுநாளே வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்து அதிர்ச்சியடைந்த தேவிகா, சரத்குமாரின் குடும்பத்தினரை அணுகியபோது, அவர்கள் தேவிகாவை அவமானப்படுத்தி அனுப்பியுள்ளனர். இதனால், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சரத்குமாரை நம்பி ரூ.1 லட்சம் கடன் வாங்கி, 3 பவுன் நகைகளையும் கொடுத்தேன். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதைக் கேட்டதால் அவரது குடும்பத்தினர் என்னை மிரட்டுகின்றனர். சரத்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னுடைய நகையையும் மீட்டுத் தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More : நீங்க இந்த அட்டையை வாங்கிட்டீங்களா..? மிஸ் பண்ணிடாதீங்க..!! ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்..!!