தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டிக்கு அருகேயுள்ள நெல்லிக்குப்பத்தில் அமைந்துள்ள புவனாம்பிகை சமேத பூலோகநாதர் கோயில் தொன்மை, ஆன்மிக மகிமை மற்றும் சிறப்புப் பண்புகளை ஒரே சேரக் கொண்ட புனிதத் தலம்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் பேரரசர் ராஜேந்திர சோழன் இதனை சிறப்பு கட்டிடக்கலையுடன் கட்டியதாக வரலாறு குறிப்பிடுகிறது. பல காலம் பராமரிப்பின்றி இருந்த இத்தலம், சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு வையாபுரி பரதேசி சுவாமிகள் கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்தனர். இன்று இதுவே பக்தர்களுக்குப் புண்ணியச் சடங்குகள் நடைபெறும் தலமாக விளங்குகிறது. தற்போது இந்து சமய அறநிலையத்துறை இதனை பராமரிக்கிறது.
கோயிலின் தனிச்சிறப்புகள்: இந்த கோயிலின் பிரதான மூர்த்தர் பூலோகநாதர், பூமி உயிர்களையும் காக்கும் சக்தி கொண்ட இறைவன் என பக்தர்கள் நம்புகின்றனர். இத்தலத்தில் சிவனும், பெருமாளும் ஒரே இடத்தில் அருள்பாலிப்பதால், இரண்டு தெய்வங்களை ஒரே நேரத்தில் தரிசிக்க முடிவது மிகச் சிறப்பாகும்.
- கிழக்கே – உயரமான ராஜகோபுரம்
- தென்கிழக்கில் – மகாகணபதி
- வடகிழக்கில் – பாலசுப்ரமணியர்
- உள்புறம் – மஹாலட்சுமி, சூரியன், சந்திரன், தட்சணாமூர்த்தி, பிரம்மா
- வடக்கு – தனி சன்னதியாக காலபைரவர்
- தெற்கு வாயிலில் நுழையும் போது – பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
மேற்கே பூலோகநாதர், வடக்கே பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், வடகிழக்கில் ஆஞ்சநேயர் ஆகியோரை ஒரே பார்வையில் தரிசிக்க முடியும். கருவறையில் புவனாம்பிகை சமேத பூலோகநாதரை ஒரே இடத்தில் பார்க்கும் அனுபவம் பக்தர்களுக்கு ஆழமான ஆன்மிக மகிழ்ச்சி அளிக்கிறது.
பூமி சார்ந்த பிரச்சனைகள், திருமணத் தடைகள், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகள் அகலும் என்பதே பக்தர்களின் நம்பிக்கை. கோயிலில் வலம் வந்து, மணலில் நடந்து செல்லும் இடம் பூலோக தரிசனத்தை குறிக்கிறது என்றும், அக்குபஞ்சர் சிகிச்சை போன்ற நன்மைகள் கால்களுக்கு ஏற்படும் என நம்பப்படுகிறது.



