தமிழ்நாட்டையே உலுக்கிய கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்த அதிர்ச்சி நீங்குவதற்குள், தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒரு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெய்வச்செயல்புரம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை காட்டுப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
நேற்று பிற்பகல் தெய்வச்செயல்புரத்தைச் சேர்ந்த அப்பெண் தனது தோட்டத்திற்கு களை எடுக்கும் வேலைக்குச் சென்றுவிட்டு தனியாக வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்ற நபர், தனியாகச் சென்ற அப்பெண்ணை வலுக்கட்டாயமாகப் பிடித்து காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் உள்ள தோட்டங்களில் வேலை செய்து கொண்டிருந்த பொதுமக்கள் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அவர்கள் அந்தப் பெண்ணை மீட்டதுடன், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட முருகனையும் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், முருகனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்கள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.



