பீகார் மாநிலத்தின் ஒரு கிராமத்தில் மக்களை 40 வயதுக்கு முன்பே உயிரிழக்க செய்யும் மர்மநோய் ஒன்று கடுமையாக பாதித்து வருகிறது.
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள தூத் பானியா கிராமத்தில் வசிக்கும் மக்கள், 40 வயதுக்கு மேல் வாழ்வது அரிதாக உள்ளது. சுமார் 250 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில், கடுமையான எலும்பு மற்றும் தசை வலி ஏற்பட்டு, படிப்படியாக பக்கவாதம் உண்டாகி, முன்கூட்டிய மரணம் ஏற்படுகிறது. 56 வயதான வினோத் பேஸ்ரா உட்படப் பலர் படுத்த படுக்கையாகி, மெதுவான மரணத்தை எதிர்நோக்கி உள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 30 முதல் 55 வயதுக்குட்பட்ட நான்கு பேர் இந்த நோயால் இறந்துள்ளனர். கிராம மக்களில் 25% பேர் குச்சிகளின் உதவியுடன்தான் நடக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
கால் வலி தொடங்கிப் பக்கவாதத்தில் முடிந்து, படுத்த படுக்கையாகி மரணத்தை ஏற்படுத்துவதே இந்த மர்மநோயின் தாக்குதலாகும். சுகாதார அதிகாரிகள் கூற்றுப்படி, முதற்கட்ட ஆய்வில், இது தாதுக்கள் மற்றும் வைட்டமின் குறைபாடுகள் மற்றும் அசுத்தமான நிலத்தடி நீர் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாகப் பொது சுகாதாரப் பொறியியல் துறைக்கு (PHED) தண்ணீரைச் சோதிக்க உத்தரவிட்டது. மருத்துவக் குழுவினர் கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தக் கோளாறு ஆஸ்டியோபோரோசிஸ் ஆக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
Readmore: ஒரே பார்வையில் பக்தர்களின் துன்பத்தை நீக்கும் தெய்வம்.. சென்னையில் இப்படி ஒரு கோவிலா..?