தானேவில் மாணவிகளுக்கு மாதவிடாய் சோதனை செய்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தனியார் பள்ளி முதல்வர் உட்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில், ஷாஹாபூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று காலையில், பள்ளியின் கழிவறையில் ரத்தக் கறை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளை, அவர்களின் அனுமதியின்றி ஆடைகளை களைத்து நிர்வாணப்படுத்தி, ஊழியர்கள் மாதவிடாய் சோதனை செய்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் கீழ் மேலும் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த பெற்றோர்கள், குழந்தை உரிமை ஆர்வலர்களும் பள்ளிக்கு வந்து நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். பெற்றோர் அளித்த புகாரின்படி, பள்ளி முதல்வர், மாணவிகளை பள்ளியின் மாநாட்டு மண்டபத்திற்கு வரவழைத்து, கழிப்பறையின் சுவர்கள் மற்றும் தரையில் இருந்த இரத்தக் கறைகளின் புகைப்படங்களை ப்ரொஜெக்டர் மூலம் திரையிட்டுக் காட்டினார். சிறுமிகளிடம் அவர்களில் யாருக்காவது மாதவிடாய் இருக்கிறதா என்று கேட்கப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாணவிகளை இரண்டு குழுக்களாக பிரித்ததாகவும், மாதவிடாய் இருப்பதாகக் கூறிய அனைவரும் ஆசிரியர்களிடம் தங்கள் கட்டைவிரல் ரேகையை கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் அப்படி இல்லை என்று கூறிய சிறுமிகளை, ஒரு பெண் உதவியாளருடன், ஒருவர் பின் ஒருவராக கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவர்களை கட்டாயப்படுத்தி ஆடைகளை களைந்து பரிசோதனைக்கு உட்படுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கூறுகையில், “என் மகள் வீட்டிற்கு நடுங்கியபடி வந்தாள். மற்ற மாணவர்கள் முன்னிலையில் கழிவறையில் தனது ஆடைகளை கழற்ற கட்டாயப்படுத்தப்பட்டதாக அவள் என்னிடம் கூறினாள். இது ஒழுக்கம் அல்ல, மனரீதியான துன்புறுத்தல்” என்றார். புகாரின் அடிப்படையில், பள்ளி முதல்வர், நான்கு ஆசிரியர்கள், உதவியாளர் மற்றும் இரண்டு அறங்காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
எட்டு பேர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 74 (பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல்), 76 (ஆடையை கழற்றும் நோக்கத்துடன் பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் கூறினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பள்ளி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.