சென்னை மற்றும் துபாய் இடையிலான தனது நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ காலம் முதல் தமிழக மக்களின் நம்பிக்கைக்குரிய சேவையாக திகழ்ந்த இந்த வழித்தடம், வரும் மார்ச் 29-ஆம் தேதியுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. சென்னைக்கு மாற்றாக, பெங்களூருலிருந்து துபாய்க்கு தனது துணை நிறுவனமான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ மூலம் சேவையை வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த சூழலில், ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டே தமிழகத்தைப் புறக்கணிப்பதாகப் போக்குவரத்து வல்லுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு காலத்தில் சென்னையில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, கொழும்பு என பல்வேறு நாடுகளுக்கு வெற்றிகரமாக விமானங்களை இயக்கி வந்த இந்த நிறுவனம், சமீபகாலமாக அந்தச் சேவைகளை ஒவ்வொன்றாக குறைத்து வருகிறது. முதற்கட்டமாக இலங்கைக்கான சேவையை நிறுத்தியது. தற்போது லட்சக்கணக்கான தமிழர்கள் பணிபுரியும் துபாய் நகரத்திற்கான சேவையையும் கைவிடுவது, தமிழகத்தின் வான்வழித் தொடர்பைப் பின்னுக்குத் தள்ளும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
தென்னிந்தியாவின் முக்கிய விமானப் போக்குவரத்து மையமாக திகழும் சென்னைக்கு உரிய முக்கியத்துவத்தை ஏர் இந்தியா வழங்கவில்லை என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இருந்த துபாய் மற்றும் கொழும்பு சேவைகள் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. தமிழக சந்தையை பெரிய அளவில் பொருட்படுத்தாமல், படிப்படியாக இங்கிருந்து வெளியேறும் ஏர் இந்தியாவின் இந்த தன்னிச்சையான போக்கு, சென்னையின் சர்வதேச விமானப் போக்குவரத்து வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Read More : FLASH | ஓபிஎஸ்-க்கு அடி மேல் அடி..!! 250 பேருடன் திமுகவில் ஐக்கியமாகும் அதிமுகவின் முக்கியப் புள்ளி..!!



