உத்தரப்பிரதேச மாநில நொய்டாவின் செக்டார் 137 இல் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில், கடந்த வாரம் பராமரிப்பாளர் ஒருவர் 15 மாத குழந்தையை, பராமரிப்பாளர் ஒருவர் தாக்கி, அவரது தொடையில் கடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த பராமராப்பாளர் குழந்தையை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. வீடியோவில், அந்தப் பெண் குழந்தையுடன் நடந்து செல்வதைக் காணலாம். அவர் குழந்தையை இரண்டு அல்லது மூன்று முறை தரையில் போடுகிறார். ஒரு கட்டத்தில், அந்தப் பெண் குழந்தையின் முதுகில் அடிப்பதையும் காணலாம். மேலும் வீடியோவில், அந்தப் பெண் குழந்தையின் காலில் கடித்ததையும் பார்க்கலாம்..
குழந்தையின் தாய், காயங்களைக் கண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து குழந்தையின் தாய், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.. இதை தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை இரவு செக்டார் 142 காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 115(2) (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 352 (குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல்) மற்றும் 351 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காவல்துறை அதிகாரி வினோத் குமார் மிஸ்ரா இதுகுறித்து பேசிய போது. “வியாழக்கிழமை குழந்தையின் உடைகளை மாற்றும்போது, தொடையில் இரண்டு அடையாளங்களைக் கவனித்தார். தோல் தொற்று இருப்பதாக சந்தேகித்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவை கடித்த அடையாளங்கள் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்,” என்று தெரிவித்தார்..
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்ததால் எரிச்சலடைந்த பராமரிப்பாளர் குழந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.. சுமார் 40 குழந்தைகள் குழந்தை பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன் எந்த தாக்குதல் புகார்களும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், குழந்தையை தாக்கிய பெண் பராமரிப்பாளர் இன்று கைது செய்யப்பட்டார். பகல்நேர பராமரிப்பு மையத்தின் தலைவரும் காவலில் வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்..