இந்திய ரயில்வேயின் நாடு தழுவிய கட்டண உயர்வைத் தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட ரயில் கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.. இதன் மூலம் இன்று முதல் ரயில் பயணம் விலை உயர்ந்ததாக மாற உள்ளது.
இது 6 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் செய்யப்படும் இரண்டாவது கட்டண உயர்வு ஆகும். கடைசியாக இந்த ஆண்டு ஜூலை மாதம் கட்டண உயர்வு செய்யப்பட்டது. அது ரயில்வே அமைச்சகத்திற்கு ரூ.700 கோடி வருவாயை ஈட்டித் தந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த விலை உயர்வு மூலம் மார்ச் 31, 2026 வரை ரயில்வேக்கு ரூ.600 கோடி வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் முன்னதாக தெரிவித்தனர்.
புதுப்பிக்கப்பட்ட ரயில் கட்டணங்கள் குறித்த முழு விவரம்
சாதாரண வகுப்புக்கு (215 கி.மீ.க்கு மேல்), ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா கட்டணம் உயரும்.
மெயில்/எக்ஸ்பிரஸ் ஏசி அல்லாத வகுப்புகளுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஏசி வகுப்புகளுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணமாக, ஏசி அல்லாத பெட்டியில் 500 கி.மீ. பயணம் செய்யும் ஒரு பயணிக்கு கூடுதலாக ரூ.10 மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.
பின்வரும் ரயில் கட்டணங்களில் மாற்றம் இல்லை:
புறநகர் ரயில்களின் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளில் எந்த கட்டண உயர்வும் இருக்காது என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், மற்ற ரயில்களின் சாதாரண வகுப்பில் 215 கி.மீ. வரையிலான பயணக் கட்டணங்களிலும் எந்த மாற்றமும் இருக்காது.
கட்டண உயர்வுக்கான காரணம் என்ன?
கடந்த பத்தாண்டுகளில் ரயில்வே தனது நெட்வொர்க் மற்றும் செயல்பாடுகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது என்றும், எனவே உயர் மட்ட செயல்பாடுகள் மற்றும் மேம்பாடுகளைக் கையாள்வதற்கு அதிக மனிதவளம் தேவைப்படுகிறது என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
“இதன் விளைவாக, மனிதவளச் செலவு ரூ.1,15,000 கோடியாக அதிகரித்துள்ளது. ஓய்வூதியச் செலவு ரூ.60,000 கோடியாக அதிகரித்துள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் செயல்பாடுகளின் மொத்தச் செலவு ரூ.2,63,000 கோடியாக அதிகரித்துள்ளது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அதிகப்படியான மனிதவளச் செலவைச் சமாளிக்கவே கட்டணச் சீரமைப்பு செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் “பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள் மீதான இந்த முயற்சிகளால், ரயில்வேயால் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்த முடிந்துள்ளது. சரக்குகளை ஏற்றிச் செல்லும் உலகின் இரண்டாவது பெரிய ரயில்வேயாக இந்தியா மாறியுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..



