வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளை உயர்த்தியுள்ளது SBI வங்கி.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி ஆகஸ்ட் 1, 2025 முதல் அதன் வீட்டு மற்றும் வீட்டு தொடர்பான கடன் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டது. அதன் படி வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியுள்ளது. முன்னதாக, எஸ்பிஐயின் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் 7.50% முதல் 8.45% வரை இருந்தன, ஆனால் இப்போது அவை 7.50% முதல் 8.70% ஆக மாற்றப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் ஆகஸ்ட் 1முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த MPC கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 5.55 சதவீதமாக மாற்றாமல் வைத்திருக்க RBI முடிவு செய்ததைத் தொடர்ந்து SBI இன் வீட்டுக் கடன் விகித உயர்வு அமலுக்கு வந்துள்ளது. மேலும் இந்த வட்டி விகித உயர்வு ஏற்கனவே கடன் வாங்கியவர்களுக்கு பொருந்தாது என்றும் புதியதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு மட்டும் இந்த புதிய உயர்வு பொருந்தும் என்று SBI வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன் வட்டி விகிதங்களின் உச்ச வரம்பை 8.45% லிருந்து 8.70% ஆக உயர்த்தும் SBI வங்கியின் இந்த முடிவு, நேரடியாகக் கடன் பெறுவோரின் மாத தவணை தொகை (EMI) மற்றும் மொத்த செலவுகளில் அதிகரிப்பை ஏற்படுத்தும். குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.50% ஆகவே தொடர்ந்தாலும், பலர் மேல் வரம்புக்கு அருகிலிருப்பதால் அவர்கள் இப்போது அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.
0.25% உயர்வு என்பது குறைவானதாக தோன்றினாலும், அது நீண்ட காலக் கடன்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, 20 வருடத்திற்கான ரூ.30 லட்சம் வீட்டு கடனில், 8.45% வட்டியில் மாத தவணை சுமார் ரூ.25,830 ஆக இருந்தது. புதிய 8.70% வட்டியில், இது ரூ.26,278 ஆக உயரும்.. இதன் மூலம் மாதத்திற்கு ரூ.450 வரை அதிக செலவாகும். முழு கடனிலும் சுமார் ரூ.1 லட்சம் வரை அதிகரிக்கலாம்..
மேலும், ரூ.50 லட்சம் மற்றும் அதற்கு மேலான கடன்கள் பெறுபவர்கள் இது அதிக சுமையாக இருக்கக்கூடும்… இது வீட்டின் மொத்த பட்ஜெட்டையும் உயர்த்துவதுடன், புதிதாக கடன் வாங்குபவர்களின் நிதி திட்டத்தையும் சிக்கலாக்கும்.