தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மண்டலங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களுக்கு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம், கடன் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பால், கடன் பெற இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சங்கம், போக்குவரத்து ஊழியர்களின் சேமிப்பை ஊக்குவிப்பதோடு, அவர்களுக்குக் கடன் வழங்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. கடந்த 9 மாதங்களாக மேற்கண்ட நான்கு மண்டலங்களைச் சேர்ந்த போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட சுமார் ரூ.15.26 கோடி கடனை சங்கத்திற்குச் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளன.
இதனால், சங்கத்தின் நிதிநிலை பாதிக்கப்பட்டு, புதிய கடன்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலைத் தீர்க்கும் வகையில், நிலுவைத் தொகையை விரைந்து வசூலிக்க, போக்குவரத்துக் கழகங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், இந்த நான்கு மண்டலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவது மற்றும் சங்கக் கணக்குகளை முடிப்பது போன்ற பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி, போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.