மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் புதிய தரவுகள் தமிழகத்தின் சாலைப் பாதுகாப்பு நிலை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளன. 2024ஆம் ஆண்டில், நாடு முழுவதும் பதிவான மொத்த சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தையும், விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2024ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மொத்தம் 67,526 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைவிட மிக அதிக எண்ணிக்கையாகும். 2023இல் பதிவான 67,213 விபத்துகளுடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது கவலையளிக்கிறது.
உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, 2024இல் தமிழ்நாடு 18,449 உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது. விபத்துகளில் 24,118 உயிரிழப்புகளைப் பதிவு செய்த உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. நாட்டின் மொத்தச் சாலை விபத்து அறிக்கைகளில், தமிழகத்தின் பங்கு மட்டும் சுமார் 14 சதவீதம் என்பது நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது. தேசிய அளவில், 2024இல் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 4.88 லட்சமாகவும், உயிரிழப்புகள் 1.77 லட்சமாகவும் உயர்ந்துள்ளன.
இந்த தரவுகளின்படி, தமிழகத்தில் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்குத் தொடர்ந்து முக்கியக் காரணமாக இருப்பது அதிவேகமே ஆகும். மாநிலத்தில் பதிவான மொத்த விபத்துகள் (47,240) மற்றும் உயிரிழப்புகளில் (12,240), 70 சதவிகிதத்திற்கும் மேல் அதிவேகத்தினால் ஏற்பட்ட விபத்துகளே பங்களித்துள்ளன. இது, மாநிலத்தில் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 66 சதவீதம் ஆகும்.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாததும் உயிரிழப்புகளுக்குப் பெரும் பங்களிக்கிறது. 2024இல், ஹெல்மெட் அணியாததால் 7,744 உயிரிழப்புகளும், சீட் பெல்ட் அணியாததால் 469 உயிரிழப்புகளும் தமிழகத்தில் பதிவாகியுள்ளன. ஹெல்மெட் தொடர்பான உயிரிழப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருவது, இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பில் உள்ள இடைவெளியைக் காட்டுகிறது.
சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாத ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் 2024இல் 4,017 ஆக குறைந்துள்ளது. இது, 2020இல் 6,174 ஆக இருந்தது. இது, ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறைகள் மற்றும் அமலாக்கத்தில் சில மேம்பாடுகள் இருப்பதைக் குறிக்கிறது.
மத்திய அரசு மோட்டார் வாகனச் சட்டம், 1988இன் கீழ் விதிகளை வகுத்தாலும், அவற்றை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது. விபத்துகளின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிவேகமாக உயர்ந்துள்ள இந்தச் சூழ்நிலையை தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், மேலும் இதுபோன்ற விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரவலான கருத்துக்கள் எழுந்துள்ளன.



