அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வரலாறு காணாத சரிவை சந்தித்து வருவதால், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப் போகும் அபாயம் எழுந்துள்ளது. குறிப்பாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வாகனங்களின் விலைகள் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாலர் உயர்வுக்கான காரணம் என்ன..?
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணங்களாக பல பொருளாதார நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்ததில் இருந்து ரூபாயின் சரிவு தொடங்கியது. இதன் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் இருந்த தங்கள் முதலீடுகளை மற்ற நாடுகளுக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.
மேலும், தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய அதிக டாலர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன. ஆனால், அதற்கு ஈடாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மூலம் போதுமான டாலர்கள் நாட்டுக்குள் வருவதில்லை. இதன் விளைவாக, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு மட்டும் 5% விழுக்காட்டுக்கும் மேல் சரிந்துள்ளது. அண்மையில், ரூபாயின் மதிப்பு ரூ.90.47 என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவாக கருதப்படுகிறது.
வீட்டு உபயோகப் பொருட்களின் விலையேற்றம் :
ரூபாய் மதிப்பு குறைந்தால், நாம் வெளிநாடுகளில் இருந்து வாங்கும் அனைத்துப் பொருட்களும் விலை அதிகமாகும். இந்தச் சரிவு, செல்போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள், மடிக்கணினிகள், ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதனப் பெட்டிகள் (ஃபிரிட்ஜ்), வாஷிங் மெஷின்கள் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலையில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏனென்றால், இந்தச் சாதனங்களுக்கான கம்ப்ரஸர்கள், சிப்கள் மற்றும் கண்ட்ரோலர்கள் போன்ற முக்கிய உதிரிபாகங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றின் விலை அதிகரிப்பதால், ஏர் கண்டிஷனர்களின் விலை 7% வரையிலும், குளிர்சாதனப் பெட்டிகளின் விலை 5% வரையிலும் அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.5,000 வரை உயரக்கூடும் என்று செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் வாகனத் துறையும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஆடி போன்ற முன்னணி சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனங்கள், நடப்பாண்டில் ஏற்கனவே ஒருமுறை விலை உயர்வை அறிவித்திருந்தன. தற்போது ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், அவை மீண்டும் விலையை உயர்த்துவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன. டாலருக்கு நிகரான மதிப்பு மட்டுமின்றி, யூரோவுக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருப்பதால், வரும் ஜனவரி மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த உள்ளதாக பி.எம்.டபிள்யூ நிறுவனம் அறிவித்துள்ளது. இதே முடிவை மெர்சிடிஸ் நிறுவனமும் பரிசீலித்து வருகிறது.
ரூபாயின் மதிப்பு சரிவது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திற்கு உகந்தது இல்லை என்றாலும் பின்னலாடை, மருந்துகள் மற்றும் மென்பொருள் போன்ற ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்குக் கூடுதல் டாலர் வருமானம் கிடைப்பதால், கணிசமான அளவில் பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.



