அதிகரித்து வரும் டிஜிட்டல் டிக்கெட் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகள் சரிபார்க்கப்படும் முறையில் இந்திய ரயில்வே புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, மொபைல் போனில் காட்டப்படும் முன்பதிவு செய்யப்படாத (Unreserved) டிக்கெட்டுகள் மட்டும் இனி ஏற்றுக்கொள்ளப்படாது. UTS செயலி, ATVM இயந்திரங்கள் அல்லது டிக்கெட் கவுண்டர்களில் பெறப்படும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளின் அச்சிடப்பட்ட (Printed) நகலை பயணிகள் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும் என இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
சமீப காலமாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி ரயில் டிக்கெட்டுகள் உருவாக்கப்படுவது குறித்து ரயில்வே அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். QR கோடு, பயண விவரங்கள், கட்டண விவரங்கள் உள்ளிட்டவை உண்மையானவை போல் தோன்றும் வகையில் நகலெடுக்கப்படுவதால், பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான எடுத்துக்காட்டாக, ஜெய்ப்பூர் வழித்தடத்தில் நடந்த ஒரு சம்பவம் குறிப்பிடப்படுகிறது. டிக்கெட் பரிசோதனையின் போது மாணவர்கள் குழு மொபைலில் காட்டிய டிக்கெட்டுகள் ஆரம்பத்தில் உண்மையானவை போல தோன்றின. QR கோடுகள் சரியாக ஸ்கேன் ஆன நிலையில், ஆழமான விசாரணையில் அவை AI மூலம் உருவாக்கப்பட்ட போலி டிக்கெட்டுகள் என்பது தெரியவந்தது.
இந்த சூழ்நிலையில், ரயில்வே வருவாயை பாதுகாக்கவும், டிக்கெட் முறையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், முன்பதிவு செய்யப்பட்ட E-Ticket-கள் மற்றும் MT-CUT டிக்கெட்டுகளுக்கு இந்த விதி பொருந்தாது என்றும் இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.
Read more: Flash : காலையிலேயே குட்நியூஸ்.. வெள்ளி விலை ரூ.3,000 குறைந்தது.. தங்கம் விலையும் அதிரடி சரிவு..!



