தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் (SI) ஆக வேண்டும் என்ற கனவோடு காத்திருந்த இளைஞர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள 46 மையங்களில் நடைபெற்ற 1,299 எஸ்.ஐ பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சுமார் 1.78 லட்சம் பேர் பங்கேற்ற இந்தப் போட்டித் தேர்வின் முடிவுகள், வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrb.tn.gov.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்களில் இருந்து, ஒரு காலிப்பணியிடத்திற்கு 5 பேர் என்ற விகிதாசார அடிப்படையில் மொத்தம் 7,414 விண்ணப்பதாரர்கள் அடுத்தகட்டமான உடல் தகுதித் தேர்வுக்கு (Physical Test) அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதித் தேர்வுகள் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி தொடங்கி மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே இறுதிச் சுற்றான நேர்முகத் தேர்வுக்கு (Viva-Voce) அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளை இணையதளத்தில் சரிபார்த்துக் கொண்ட விண்ணப்பதாரர்கள், அடுத்த சில வாரங்களில் நடைபெற உள்ள உடல் தகுதித் தேர்விற்காக தங்களைத் தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் அழைப்புக் கடிதங்களை (Hall Ticket) வாரியத்தின் இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



