மயிலாடுதுறை மாவட்டம் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டிருந்தாலும், அவற்றில் மிக முக்கியமாக கருதப்படுவது சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியான சித்தர்காடு கிராமம்தான். தற்போது நகர்ப்புற பகுதியாக மாறிவிட்ட சித்தர்காடு, மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் நகரமாக மாறியிருந்தாலும், 13 ஆம் நூற்றாண்டில் இந்தக் கிராமம் 64 சித்தர்கள் வாழ்ந்த ஒரு ஆன்மீக மையமாக திகழ்ந்திருக்கிறது. 13 ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் வாழ்ந்த சைவ சமயத்தை சேர்ந்தவர் சீர்காழி சிற்றம்பல நாடிகள். திருச்செந்தூர் முருகனை வழிபட்டு தவ வாழ்க்கை வாழ்ந்த இவருடன், மேலும் 63 சித்தர்கள் தவமிருந்து வந்துள்ளனர்.
ஒரு நாள், சிற்றம்பல நாடிகள் தாம் ஜீவ சமாதி நிலையை அடையப் போவதை தன்னுடன் இருந்த 63 சீடர்களுக்கும் அறிவித்தார். இதையடுத்து, அவர் சோழ மன்னரை சந்தித்து, சித்தரை மாதத்தில் வரும் நட்சத்திர நாளில், தான் தனது 63 சீடர்களுடன் ஒரே இடத்தில் ஜீவ சமாதி அடைய போவதாகவும், அதற்கு தகுந்த இடத்தைத் தேர்வு செய்து தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அவருடைய கோரிக்கையை ஏற்ற சோழ மன்னன், மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தார். அந்த இடத்தில், மொத்தம் 64 சமாதிகள் அமைக்கப்பட்டது. அவ்வாறு அமைக்கப்பட்ட சமாதிகளில், சீர்காழி சிற்றம்பல நாடிகள் முதலில் தனக்கென ஒதுக்கப்பட்ட சமாதியில் இறங்கி, சிவ சிந்தனையோடு சின்முத்திரை தாங்கி ஜீவ நிலையை அடைந்தார்.
அவரைத் தொடர்ந்து, அவரது சீடர்கள் 63 பேரும் தமக்கென ஒதுக்கப்பட்ட சமாதிகளில் இறங்கி சித்தி பெற்றனர். இந்த மகத்தான ஆன்மீக நிகழ்வின் காரணமாகவே, இந்த இடம் இன்று சித்தர்காடு என்று அழைக்கப்படுகிறது. சிற்றம்பல நாடிகளின் சமாதி மீது ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதுவே இன்று கோவிலாக உருவெடுத்துள்ளது. அந்தக் கோவிலில், 64 ஜீவ சமாதிகளின் அடையாளமாக, 64 சிவலிங்கங்கள் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்தலம், இன்றளவும் மிகவும் புனிதமான வழிபாட்டுத் தலமாக பார்க்கப்படுகிறது.
Read More : தலைகீழாக காட்சி தரும் அதிசய சிவன்.. எங்கும் காண முடியாத அதிசயம்..!! இத்தனை சிறப்புகளா..?