சர்வதேச நிதிச்சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி இடையிலான போட்டி எப்போதும் சுவாரஸ்யமானது. ஆனால், புகழ்பெற்ற ‘ரிச் டாட் புவர் டாட்’ (Rich Dad Poor Dad) நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, தற்போதைய சூழலில் தங்கத்தை விட வெள்ளியே முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தைத் தரும் என்று அதிரடியாக கணித்துள்ளார். குறிப்பாக, 2026-ஆம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை $200 (சுமார் 16,000 ரூபாய்க்கு மேல்) என்ற இலக்கை எட்டும் என அவர் தனது கணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
கியோசாகியின் இந்த வாதத்திற்குப் பின்னால் வலுவான காரணங்கள் உள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சேமிப்புத் தங்கமாகப் பார்க்கப்பட்டாலும், இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்ப யுகத்தில் வெள்ளியின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. “தொழில்துறை புரட்சியின் போது இரும்பு எப்படி ஒரு நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பைத் தீர்மானித்ததோ, அதேபோல நவீன தொழில்நுட்ப யுகத்தில் வெள்ளி ஒரு கட்டமைப்பு உலோகமாக (Strategic Metal) உருவெடுத்துள்ளது” என்கிறார் கியோசாகி. சூரிய ஆற்றல் தகடுகள் (Solar Panels), மின்சார வாகனங்கள் (EV), மின்னணு சாதனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என நவீன கண்டுபிடிப்புகள் அனைத்திலும் வெள்ளி தவிர்க்க முடியாத மூலப்பொருளாக உள்ளது.
சமீபத்திய புவிசார் அரசியல் நகர்வுகளும் வெள்ளி விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து விவகாரத்தில் வரிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதைத் தொடர்ந்து, சந்தையில் நிலவிய பதற்றம் குறைந்து வெள்ளியின் விலை சற்றுச் சரிந்தது. இருப்பினும், அமெரிக்க மத்திய வங்கியின் மீதான அரசியல் அழுத்தம் மற்றும் ஜப்பானியப் பத்திரச் சந்தையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி போன்ற காரணங்களால், பாதுகாப்பான முதலீடாக வெள்ளி மீண்டும் கவனம்பெறத் தொடங்கியுள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் (COMEX) வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் $94-ஐ கடந்து முன்னேறி வருகிறது.
கடந்த ஆண்டு மட்டும் சுமார் 140% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள வெள்ளி, 1990-களில் வெறும் $5-ஆக இருந்தது. தற்போது $90-ஐ தாண்டி வர்த்தகமாகும் நிலையில், அடுத்த சில மாதங்களில் இது 100% கூடுதல் வளர்ச்சியை எட்டும் என்பது கியோசாகியின் நம்பிக்கை. இருப்பினும், சந்தை நிலவரங்கள் எப்போதும் நிச்சயமற்றவை என்பதை ஒப்புக்கொள்ளும் அவர், முதலீட்டாளர்கள் நீண்ட கால நோக்கில் வெள்ளியை அணுகுவது புத்திசாலித்தனம் என்று அறிவுறுத்துகிறார். தொழில்துறை தேவை மற்றும் பண மதிப்பீடு என இரண்டு முனைகளிலும் வெள்ளிக்கு இருக்கும் பலமே அதன் விலை உயர்வுக்கு முக்கியக் காரணியாக அமையப்போகிறது.
Read More : UPI vs BHIM..!! இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன..? உங்களது பணத்திற்கு எது அதிக பாதுகாப்பு..?



