கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூரைச் சேர்ந்த 40 வயது கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கு, 9 மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. தற்போது அவரது மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், கார்த்திக்கின் மனைவி தனது 32 வயது தங்கைக்கு சில நாட்களுக்கு முன்பு நீலாம்பூரில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார்.
ஆனால், திருமணம் முடிந்து நான்கே நாட்களில் புதுப்பெண் திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அதே சமயத்தில், புதுப்பெண்ணின் அக்காள் கணவரான கார்த்திக்கும் மாயமாகியிருந்தார். இதனால், போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, புதுப்பெண் கார்த்திக்குடன் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
பின்னர், இருவரது செல்போன் டவர்களை ஆய்வு செய்ததில், அவர்கள் ஒரே இடத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
திருமணத்திற்கு முன்பே புதுப்பெண்ணுக்கும், அவரது அக்காள் கணவரான கார்த்திக்கிற்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததும், இதை இருவரும் மிகவும் ரகசியமாகப் பேணிக் காத்ததும் தெரிய வந்தது. இந்த விவகாரம் அரசல் புரசலாகத் தெரிந்ததால்தான், கார்த்திக்கின் மனைவி அவசரமாக தனது தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் செய்து வைத்துள்ளார்.
திருமணம் நடந்தாலும், புகுந்த வீட்டிற்கு அரை மனதுடன் சென்ற புதுப்பெண், தனது அக்காள் கணவரான கார்த்திக்கை நினைத்து ஏங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் கார்த்திக்கைத் தொடர்பு கொண்டு, “எனக்கு இங்கு வாழப் பிடிக்கவில்லை, உங்களுடன் சேர்ந்து வாழ்ந்து விடுகிறேன்” என்று கூறியுள்ளார். கார்த்திக்கும் அதற்குச் சம்மதம் தெரிவிக்கவே, இருவரும் வீட்டை விட்டு ஓடியது வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



