சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம். காரைக்குடி திருப்பத்தூர் -சாலை, கும்மங்குடி கிராமத்தில் நேற்று பிற்பகல் அறந்தாங்கியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்துகளில் பயணம் செய்த ஒன்பது பெண்கள். இரண்டு ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 54 நபர்கள் காயம் அடைந்துள்ளனர்..
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பதிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்..
இந்த நிலையில் சிவகங்கை விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழ்நாட்டின் சிவகங்கையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இறந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதம மந்திரி நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.



