இந்திய வீடுகளில் தூபக் குச்சிகள் அல்லது அகர்பத்திகள் பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது. நவராத்திரி காலத்தில் வீடுகள் தீபங்களால் ஒளிர்ந்து, அகர்பத்திகளின் நறுமணத்தில் நிரம்புவது வழக்கம். ஆனால், இந்த நறுமணம் நம் நுரையீரலுக்கு கேடு விளைவிக்கக்கூடும் என்று நுரையீரல் நிபுணர் டாக்டர் சோனியா கோயல் எச்சரிக்கிறார்.
இதுகுறித்து இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவர் கூறுகையில், “அகர்பட்டிகள் நுண்ணிய துகள்கள் (PM2.5), கார்பன் மோனாக்சைடு மற்றும் காரிய கலவைகள் (VOCs) வெளியிடுகின்றன, இது வீட்டில் காற்றை மாசுபடுத்துகிறது. அகர்பட்டியிலிருந்து வரும் புகை சிகரெட் புகையைப் போலவே தீங்கு விளைவிக்கும் என்று நுரையீரல் நிபுணர் எச்சரிக்கிறார்.
ஒரு ஊதுபத்தியை எரிப்பதால் உருவாகும் துகள்கள், ஒரு சிகரெட் புகைப்பதால் உருவாகும் துகள்களுக்கு நிகரானது என்பதை ஆய்வுகள் காட்டுவதாக அவர் எச்சரித்தார். சிறுவர்கள், வயதானோர் மற்றும் ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகுவர். மூடிய, காற்றோட்டமில்லாத அறைகளில் தினமும் தூபப் புகையை வெளியிடுவது நீண்டகால நுரையீரல் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்” என தெரிவித்தார்.
பாதுகாப்பான மாற்றுகள்:
அகர்பத்தி ஏற்றுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்று அவசியம் இல்லை. அகர்பத்தி பயன்படுத்தும் போதும் ஜன்னல்களை திறந்து வைத்து, மின்விசிறியை இயக்கத்தில் வைத்திருப்பது நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்யவும். இது அபாயங்களைக் குறைக்க உதவும்.
அகர்பத்திகளைக் கையாளும் போது, உங்கள் அறையில் குறுக்கு காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வது முக்கியம் என்று அவர் வலியுறுத்துகிறார், மேலும் தொடர்ச்சியான இருமல் அல்லது மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளைப் புறக்கணிக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறார்.