ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
நவி மும்பையில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைதொடர்ந்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி, அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தானா அதிரடி காட்டி 212 ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து வீராங்கனைகள் தடுமாறினர். பிரமாதமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 95 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரிகளும், நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஜெமிமா 11 பௌண்டரிகளை அடித்து 55 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஹர்மன் பிரித் கவுர் 10 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய மகளிர் அணி 49 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்தது. மழை குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 44 ஓவர்களில் 325 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து தொடக்க வீராங்கனைகள், சுசி பைட்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஜார்ஜியா 30 ரன்களிலும், அமீலா கெர் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் சோபி டிவைன் 6 ரன்களில் வெளியேற புரூக் ஹாலிடே 81 ரன்கள் எடுத்தனர். 44 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.



