தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களில் குறிப்பிடத்தக்கது தான், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டம்.
இந்தத் திட்டம், நீண்ட காலமாக அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்களுக்கு, அவர்கள் குடியிருக்கும் நிலத்திற்கே சட்டப்பூர்வ உரிமை அளித்து, அவர்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்குகிறது. வீடு என்பது ஒருவரது வாழ்க்கையின் பாதுகாப்பு மட்டுமல்ல, சமூக மரியாதையின் அடையாளம் என்பதையும் உணர்ந்துதான், 2006ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 4.37 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், சென்னை மற்றும் பிற மாநகராட்சிகளிலும், குறிப்பாக பெல்ட் ஏரியா பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இது நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.
விண்ணப்பிக்க தகுதிகள் என்ன..?
இந்தத் திட்டத்தின் கீழ் பட்டா பெற, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வழக்கம்போல் எந்தவித ஆட்சேபனையும் இல்லாமல் வசித்து வர வேண்டும். சில பகுதிகளில், 10 ஆண்டுகள் வசித்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இது, அந்த பகுதியின் நில ஆக்கிரமிப்பு சூழ்நிலையையும், உள்ளாட்சி நிர்வாக ஆலோசனைகளையும் பொருத்தது.
தகுதியுடையவர்களுக்கு வழங்கப்படும் நிலத்தின் பரப்பளவும், அவர்கள் வசிக்கும் பகுதிக்கேற்ப மாறுபடுகிறது. கிராமப்புறங்களில், பொதுவாக 2 முதல் 2.5 சென்ட் வரை நிலம் வழங்கப்படுகிறது; சில இடங்களில் 3 சென்ட் வரை வழங்கப்படும். நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, நில வசதி குறைவாக இருப்பதால், பொதுவாக 1.25 முதல் 1.5 சென்ட் வரை நிலம் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலங்கள் பெரும்பாலும் அரசு புறம்போக்கு நிலங்கள் அல்லது நத்தம் நிலங்களில் இருந்து ஒதுக்கப்படுகின்றன.
முக்கிய விதிமுறைகள் :
அனைத்து அரசு நிலங்களிலும் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற எண்ணம் தவறு. அரசு, சில ஆட்சேபகரமான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு சட்டபூர்வ உரிமை வழங்க முடியாது என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளது. எடுத்துக்காட்டாக, ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகள், நீர்ப்பாசன கால்வாய் பகுதிகள், கோயில் நிலங்கள் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்படாது.
இருப்பினும், இப்படியான இடங்களில் வசித்து வரும் மக்களை அரசு முற்றிலும் புறக்கணிக்கவில்லை. பாதுகாப்பான இடங்களில் மாற்றுவீடுகள் கட்டித் தரப்படுவதோடு, அவர்களின் குடியிருப்பு உரிமைக்கும் உரிய இடம் தேடி வழங்கப்படுவதும் நடைபெற்று வருகிறது.



