சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ”மேட்ரிமோனி மூலம் தனக்குப் பொருத்தமான வரனைத் தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் தொடர்புகொண்டு என்னிடம் பேசினார். அப்போது அவர், உங்கள் புகைப்படத்தைப் பார்த்தேன். நான் உங்களைத் திருமணம் செய்துகொள்கிறேன், உங்களை நேரில் பார்க்க வேண்டும்” என்று ஆசைவார்த்தை கூறினார்.
இதையடுத்து நேரில் சந்தித்தபோது, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, அந்த வாலிபர் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், பின்னர், அந்த வாலிபர் தலைமறைவாகிவிட்டதாகவும்” கூறியுள்ளார். எனவே, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வாலிபரின் கார் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அண்ணாநகர் துணை ஆணையர் உதயகுமாரின் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் நெல்லை சென்று, அங்குத் தொடர்ந்து 15 நாட்கள் முகாமிட்டு தேடினர். இறுதியில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய சூர்யா என்பவரைக் கைது செய்தனர்.
சூர்யாவை சென்னைக்கு அழைத்து வந்தபோது, அமைந்தகரை கூவம் ஆற்றின் அருகே அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயன்றார். அப்போது கீழே விழுந்ததில், சூர்யாவின் இடது கால் முறிந்தது. இதையடுத்து, உடனடியாக அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பின், சூர்யா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, சூர்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் இதே பாணியில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வதாக கூறி, உடலுறவு வைத்துக் கொண்டது தெரியவந்தது. மேட்ரிமோனி பெயரில் நடந்த இந்த சம்பவம், திருமண வரன் தேடுவோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : கார் ரேஸில் மீண்டும் மிரட்டிய அஜித்..!! ஸ்பெயின் பந்தயத்தில் ஏ.கே. ரேசிங் அணி சாதனை..!!



