தமிழகத்தில் தொலைக்காட்சி உலகில் பிரபலமான பெயராக விளங்குபவர் தொகுப்பாளர் கோபிநாத். தொகுப்பாளர் கோபிநாத் என்பதை தாண்டி நீயா நானா கோபிநாத் என்றால் தான் பலருக்கு தெரியும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் “நீயா நானா” நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
பல வருடங்களாக டிஆர்பி குறையாமல் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோவை மிகவும் விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக கொண்டு செல்வதன் மூலம் மக்களுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டார் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அணியும் ‘கோட்’ இவருக்கு புதிய அடைமொழியை வாங்கி தந்தது. அதன் பின்பு விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் ‘கோட்டு கோபிநாத்’ என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
முதல் எபிசோடிலிருந்து இன்றுவரை இந்த நிகழ்ச்சியை அவர் மட்டுமே தொகுத்து வழங்குகிறார். தொகுப்பாளராக மட்டுமன்றி, சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளராகவும் பெயர் பெற்றுள்ளார். தெருவெல்லாம் தேவதைகள், ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!, நேர் நேர் தேமா, நீயும் நானும் என்ற புத்தகங்கள் மூலம் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். இதனால் அவர், திறமையான எழுத்தாளராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
நீயா நானா நிகழ்ச்சிக்கு அப்பாற்பட்டும், கோபிநாத் பல்வேறு சினிமா மற்றும் சமூக துறையைச் சேர்ந்த பிரபலங்களிடம் நேர்காணல்கள் நடத்தி வந்துள்ளார். அவரது எளிமையான கேள்விகள், உரையாடும் திறன், மற்றும் மக்களை ஈர்க்கும் பேச்சுத் திறன் காரணமாக, அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகம்.
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஒரே தொகுப்பாளராக அவர் பெயர் பெற்றுள்ளார். ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 5 லட்சம் ரூபாய் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. மேலும், அவரது சொத்து மதிப்பு 7 முதல் 10 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.