மேகாலயாவில் தேனிலவுக்கு சென்றபோது கணவர் ராஜா ரகுவன்சி கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவி சோனம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், ‘ஆபரேஷன் ஹனிமூன்’ பற்றிய விவரம் வெளிவந்துள்ளது. அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து கிடைத்த தாலி மற்றும் மோதிரத்தின் மூலம் முதல் துப்பு போலீசாருக்கு கிடைத்தது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை. கடந்த ஜூன் 2-ம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மீட்கப்பட்டது. மேகாலயா போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி சோனம், காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
போலீசாருக்கு துப்பு கிடைத்தது எப்படி?. காவல்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ராஜா ரகுவன்ஷியும் சோனமும் தேனிலவுக்காக பெங்களூருவில் இருந்து மேகாலயாவிற்கு புறப்பட்டபோது கூலிப்படையினர் புதுமணத் தம்பதியை பின்தொடர்ந்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சோனத்தின் காதலர் ராஜ் குஷ்வாகா, இந்தூரிலேயே தங்கிவிட்டார்.
கடந்த 23 ஆம் தேதி ராஜா ரகுவன்ஷியும் சோனமும் நோங்கிரியாட் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு புதுமணத் தம்பதி தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே கூலிப்படையினரும் தனியாக வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளனர். பின்னர் அங்குள்ள அருவியை சுற்றிப் பார்க்க புதுமணத் தம்பதியினர் சென்றனர். அவர்களுடன் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் உடன் சென்றார். தனிமையில் பொழுதை கழிக்க வேண்டும் என்று கூறி அந்த சுற்றுலா வழிகாட்டியை சோனம் திருப்பி அனுப்பியுள்ளார். பின்னர் செல்பி எடுக்க வேண்டும் என்று கூறி மலை உச்சிக்கு கணவர் ராஜா ரகுவன்சியை, சோனம் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது கூலிப்படையை சேர்ந்த ஆகாஷ், விஷால், ஆனந்த் ஆகியோர் பின்தொடர்ந்து வந்து ராஜா ரகுவன்ஷியை கொடூரமான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர். கூலிப்படையினருடன் சோனமும் இணைந்து ராஜா ரகுவன்ஷி உடலை சுமார் 200 அடி ஆழமான பள்ளத்தில் தூக்கி வீசிவிட்டு இருசக்கர வாகங்களில் அங்கிருந்து தப்பியுள்ளனர். ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக சோனம் வாக்குறுதி அளித்திருப்பது புலன் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் நோங்கிரியாட்டில் உள்ள சுற்றுலாத் தலத்திற்கு செல்வதற்காக முன்பாக புதுமணத் தம்பதியினர் சோரா(sohra) பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தங்குவதற்கு அறை கிடைக்காததால் தங்களது சூட்கேஸை அங்கேயே வைத்துவிட்டு நோங்கிரியாட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சோனம் தனது தாலி மற்றும் மோதிரத்தை சூட்கேஸிலேயே வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அதாவது, புகழ்பெற்ற இரட்டை அடுக்கு வாழ்க்கை வேர் பாலம் அமைந்துள்ள நோங்கிரியாட் கிராமத்தை அடைய 3,000 படிகளுக்கு மேல் நடக்க திட்டமிட்டிருந்ததால், அவர்கள் தங்கள் சூட்கேஸ்களை ஹோம்ஸ்டேயிலேயே விட்டுவிட முடிவு செய்தனர். அதன்படி, புதுமணப் பெண் சூட்கேஸில் தாலியை கழற்றி வைத்துவிட்டுச் சென்றதும், சுற்றுலா வழிகாட்டியின் வாக்குமூலமும் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.
“குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர், மேலும் அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்ட நிலையில், மறுக்க இடமில்லை” என்று காவல்துறை அதிகாரி கூறினார். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சோனம், அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா மற்றும் மூன்று கொலையாளிகளையும் எட்டு நாள் போலீஸ் காவலில் வைக்க ஷில்லாங்கில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Readmore: குரூப் “பி” மற்றும் “சி” பட்டதாரி அளவிலான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம் இதோ