சியோங்டாம்-டோங் ஸ்கேண்டல் மற்றும் தி டிவோர்ஸ் இன்சூரன்ஸ் போன்ற தொடர்களில் நடித்துப் புகழ்பெற்ற தென் கொரிய நடிகை லீ சியோ-யி (Lee Seo-yi), தனது 43-வது வயதில் மரணமடைந்தார்.
அவரது மரணச் செய்தி, மேலாளர் ஒருவரால் இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாக உறுதிப்படுத்தப்பட்டது. அவரது மரணத்திற்கு காரணம் என்ன என்பது தொடர்பான விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இந்தச் செய்தி ரசிகர்கள் மற்றும் சமூக ஊடக பயனாளர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரிய நடிகை லீ சியோ-யி 1982 ஏப்ரல் 18ஆம் தேதி பிறந்தவர். 2013 ஆம் வருடம் வெளியான ஹர் ஜூன், தி ஒரிஜினல் ஸ்டோரி என்ற நாடகத்தின் மூலமாக அறிமுகமானார். 2025-ஆம் ஆண்டின் மே மாதம் வரை அதாவது அவர் இறக்கும் வரை தி டிவோர்ஸ் இன்சூரன்ஸ் என்ற புதிய தொடரில் நடித்துகொண்டிருந்தார். இறப்பதற்கு முந்தைய நாள் வரை படப்பிடிப்பில் பங்கேற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்புத் திறமையுடன், லீ சியோ-யி கல்வியிலும் சிறந்து விளங்கினார்.
அவர் ஹான்குக் வெளிநாட்டு ஆய்வுகள் பல்கலைக்கழகத்தில் செக் மற்றும் ஸ்லோவாக் மொழிகளில் முதன்மைப் பட்டம் பெற்றார். பின்னர், தனது கல்வியை மேலும் தொடர பூசன் தேசிய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு செய்தார். இது அவரது அறிவுசார் ஆர்வத்தையும் கற்றல் ஆர்வத்தையும் பிரதிபலித்தது.