தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அபாரமான நடிகர் என்றும், அசைக்கமுடியாத நட்சத்திரம் என்றும் பெயர் பெற்று அதைத் தக்கவைத்தபடியே பாலிவுட் படங்களில் இந்திய அளவில் புகழ்பெற்று சர்வதேச திரைப்படங்களில் நடித்து உலகத்தின் கவனத்தை ஈர்த்து அனைத்து எல்லைகளையும் தாண்டி உயர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 20 ஆண்டுகளை நெருங்கும் திரைப் பயணத்தில் தனுஷ் உடைத்திருப்பது பிராந்திய தேசிய சர்வதேச எல்லைகளை மட்டுமல்ல. உடல்வாகு, தோற்றம், மாஸ் நடிகர், கிளாஸ் நடிகர், மசாலா படம், விருதுகளுக்கான படம் என்பது போன்ற அனைத்து வரம்புகளையும் அவர் தகர்த்தெறிந்திருக்கிறார்.
அண்ணன் செல்வராகவன் திரைக்கதை எழுத தந்தை கஸ்தூரி ராஜா இயக்கத்தில் பள்ளிக்குச் செல்லும் விடலைச் சிறுவனாக அறிமுகமானவர் தனுஷ். அடுத்து அண்ணன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தில் கல்லூரி மாணவராக சபிக்கப்பட்ட குழந்தைப் பருவத்தால் விளைந்த உளவியல் சிக்கலைக் கொண்ட இளைஞனைக் கண்முன் நிறுத்தி அனைவரையும் வியக்க வைத்தார். திருடா திருடா’ படத்தின் மூலம் லாஜிக்கைப் பற்றிய கவலையே இல்லாத மசாலா சினிமாவிலும் வெற்றிக் கணக்கைத் தொடங்கினார். அந்தப் படத்தில் ‘மன்மதராசா’ பாடலில் அவர் ஆடிய நடனத்தில் இருந்த துடிப்பும் வேகமும் தமிழ் சினிமா அதுவரை கண்டிராதது.
சுள்ளான்’, ‘தேவதையைக் கண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘ஒருநாள் ஒரு கனவு’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’, ‘பொல்லாதவன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘படிக்காதவன்’, ‘ஆடுகளம்’, ‘வேங்கை’, ‘மயக்கம் என்ன’ எனத் தொடர்ந்த பயணத்தில் மாஸ் படங்களிலும் கிளாஸ் படங்களிலும் இரண்டுக்கும் இடைப்பட்ட படங்களிலும் மாறி மாறி நடிப்பது மட்டுமல்ல கிளாஸ் படங்களில் மாஸ் அம்சங்களையும் மாஸ் படங்களில் கிளாஸ் அம்சங்களையும் அநாயசமாகப் புகுத்தி இரண்டிலும் ரசிகர்களை அசத்தும் வித்தையில் கைதேர்ந்தவரானார்.
வேலையில்லா பட்டதாரி’யில் அம்மாவின் மரணத்துக்குப் பிறகு கதறி அழாமல் அதிர்ச்சியில் உறைந்துபோவதும் மனித மனங்களின் ஆழமாகப் புதைந்திருக்கும் வன்மத்தைத் தோண்டியெடுத்த ‘ஆடுகளம்’ படத்தில் லுங்கியைத் தூக்கி பற்களால் கடித்தபடி அண்டர்வேர் தெரிய நடனமாடுவதும் இரண்டுக்கும் ரசிகர்களின் கை தட்டல்களைப் பெறுவதும் தனுஷ் போன்ற அரிதான நடிகர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
புதுப்பேட்டை, ‘பொல்லாதவன்’ படத்தில் சாதாரண சண்டைக் காட்சிக்கு சிக்ஸ்பேக் வைத்ததும் ‘அசுரன்’ படத்தில் உடல் மொழியாலும் குரலாலும் இடுங்கிய கண்களாலுமே ஐம்பது வயதை நெருங்குபவராகவும் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்ததும் உடல் என்னும் எல்லையைக் கடந்த சாதனையாளராக தனுஷை நிலைநிறுத்தின. ஆடுகளம்’ படத்தில் நடித்ததற்காக இளம் வயதில் தேசிய விருது வாங்கினார். ‘அசுரன்’ படத்துக்காக இரண்டாவது முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். ‘ஒய் திஸ் கொலவெறி’ என்னும் ஜாலியான பாடலின் மூலம் தேசம் முழுவதும் புகழடைந்தார். ‘ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படங்களின் மூலம் பாலிவுட்டிலும் தரமான நடிகராக அடையாளம் காணப்பட்டார்.
நடிகர், நட்சத்திரம் என்பதைத் தாண்டி. பாடகர், பாடலாசிரியராகவும் சிறப்பான பல வெற்றிப் பாடல்களைத் தந்துள்ளார். ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’ போன்ற சர்வதேச அங்கீகாரங்களையும் தேசிய விருதுகளையும் குவித்த தரமான திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ‘ப .பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்தவர் ஒரு முதிர்ச்சியான படைப்பாளியாகவும் ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்தார்.
இப்படியான நிலையில் தனுஷின் 40வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், தனுஷ் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவர் தற்போது நடித்துவரும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. வரலாற்று கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் போஸ்டர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் என சொல்லப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
ஒரு நடிகராக அனைத்து எல்லைகளையும் கடந்து சாதித்தவர் ஒரு கலைஞராக தான் கையிலெடுத்த அனைத்து கலைகளிலும் வெற்றிகளை மட்டுமல்லாமல் விருதுகளையும் குவித்தவர் தனுஷ். பல வகைகளில் வெகுஜன சினிமாவில் மிகவும் அரிதான சாதனையாளரான தனுஷ் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தவும் மென்மேலும் பல உயரங்களை அடையவும் அவருடைய இந்தப் பிறந்தநாளில் மனதார வாழ்த்துவோம்.