தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கார்டு தொடர்பான புகார்களை தீர்க்க, மாதந்தோறும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் குறைதீர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இம்மாதத்திற்கான முகாம், செப்டம்பர் 13ஆம் தேதி சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.
சென்னையில் உள்ள 14 மண்டலங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜம்மணபுதூர், ஆத்தூர் குப்பம், திருவாபாளையம் மற்றும் விண்ணமங்கலம் ஆகிய நியாயவிலைக் கடைகளிலும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம்கள் நடைபெற இருக்கிறது.
இந்த முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மற்றும் கைபேசி எண் மாற்றம், புதிய அட்டை கோருதல், பொருட்களின் தரம் குறித்த புகார்கள் போன்றவற்றை மனுக்களாக பொதுமக்கள் அளிக்கலாம். இதற்கு உடனடி தீர்வு காணப்படும்.
சமீபத்தில், ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் செய்வதற்காக, மின்னணு எடை கருவியுடன் பிஓஎஸ் இயந்திரத்தை புளூடூத் மூலம் இணைக்கும் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பொருட்களின் எடை சரியாக இருப்பதை அரசு உறுதி செய்கிறது. ஆனால், இந்த நடைமுறையால் ரேஷன் கடை ஊழியர்கள் பல சிக்கல்களை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாகப் பில் போடுவதால், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் கைரேகை வைக்க வேண்டியுள்ளது. இதனால், ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே பொருட்கள் வழங்க முடிகிறது. முன்பு 100 முதல் 150 பேருக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எனவே, இதற்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.