இன்று இரவு நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் – இலங்கை அணிகளும், இரண்டாம் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளும் மோதின. இதில், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் அபார வெற்றி பெற்றன. இந்த நிலையில், சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 3-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கைக்கு அதிர்ச்சி அளித்து அபார வெற்றி பெற்றது. அதே உற்சாகத்துடன் ஆப்கானிஸ்தான் அணி இன்று வங்கதேசம் அணியை எதிர்கொள்கிறது. 2வது வெற்றியுடன் ‘சூப்பர் 4’ சுற்று வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் அந்த அணி களமிறங்குகிறது. வங்கதேச அணியை பொறுத்தவரை சமீபகாலங்களில் தடுமாற்றத்தை சந்தித்து வந்தாலும், ஆசிய கோப்பை தொடரில் எழுச்சி பெற காத்திருக்கிறது.