72 நாடுகள் பங்கேற்ற 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று முடிந்தது. போட்டிகளை முடிவடைந்ததை அடுத்து நிறைவு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிறைவு விழாவில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் அவன் இவன் படத்தில் இடம்பெற்ற ‘டியா டியா டோலே’ பாடலுக்கு அசத்தலாக 3 பெண்கள் நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘டியா டியா டோலே’ பாடல் இயல்பாகவே அனைவரையும் நடனமாட வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். இசையும் சரி அந்தப் பாடலில் விஷால் ஆடிய நடனமும் மிகவும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 61 பதக்கங்கள் பெற்று புள்ளிப் பட்டியலில் 4-ஆம் இடம் பிடித்தது. 67 தங்கப் பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை இங்கிலாந்தும், 3-வது இடத்தை கனடாவும் பிடித்துள்ளன.