ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை 1984ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பையை 7 முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலையால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஜெய் ஷா இன்று வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று தகுதிச்சுற்றில் இடம்பிடித்த அணியுடன் இந்தியா மோதுகிறது. இந்தியா, பாகிஸ்தான், தகுதிச்சுற்று அணி என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 11ஆம் தேதியன்று துபாயில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதுகின்றன. அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.