ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட இந்தியா, தொடரில் நீடிப்பதற்கான வாய்ப்புகளை உற்று நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா- குசல் மெண்டிஸ் ஜோடி அபார தொடக்கத்தை அளித்தது. இருவரும் இணைந்து முதல் இரு ஓவர்களில் தடுமாறினாலும், இந்திய வீரர்களின் அடுத்தடுத்த ஓவர்களில் நேர்த்தியாக ஆடினர். குறிப்பாக, இலங்கையின் தொடக்க வீரர் பதும் நிசங்கா அதிரடியாக ஆடினர். அர்ஷ்தீப், ஹர்திக், அஸ்வின், சாஹல் என யார் வீசினாலும் அவர்களது பந்தை வெளுத்து வாங்கினர். இதனால், 5.1 ஓவர்களிலே இலங்கை 50 ரன்களை கடந்தது. இவர்கள் இருவரும் இணைந்து இந்திய பந்துவீச்சை திறம்பட சமாளித்ததால் மைதானத்தில் இந்திய ரசிகர்கள் அமைதியாகவே இருந்தனர். அபாரமாக ஆடிய நிசங்கா அரைசதத்தை கடந்தார். ஆனால், சஹல் வீசிய 12-வது ஓவரில் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.
அதிரடி காட்டிய நிசங்கா 52 ரன்களில் சஹல் சுழலில் வீழ்ந்தார். அவர் 37 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் வெளியேறினார். அதே ஓவரில் புதிய பேட்ஸ்மேன் அசலங்கா டக் அவுட்டாகி சஹல் பந்தில் வெளியேறினார். மறுமுனையில் தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். அஸ்வின் வீசிய 14வது ஓவரில் குணதிலகா 1 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி 6 ஓவர்களில் 64 ரன்கள் தேவை என்றபோது, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த குசல் மெண்டிஸ் சஹல் பந்தில் 37 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 57 ரன்கள் எடுத்த நிலையில், அவுட்டானார். கடைசி 16 பந்துகளில் 32 ரன்கள் தேவை என்றதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.
புவனேஷ் வீசிய 19-வது ஓவரில் இலங்கை கேப்டன் சனகா அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். கடைசி 6 பந்துகளில் 7 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. முதல் பந்தை ராஜபக்சே ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுக்க 4 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 3-வது பந்தில் இலங்கை வீரர்கள் 2 ரன் எடுக்க, 3 பந்தில் 3 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது. 4-வது பந்தில் ஒரு ரன் எடுக்க, கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் ஓவர் த்ரோவில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அர்ஷ்தீப் கடைசி ஓவரை சிறப்பாக வீசினாலும் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், இலங்கை அணிகளுடன் அடுத்தடுத்து தோற்றதால் நடப்பு சாம்பியன் இந்தியா ஏறக்குறைய தொடரை விட்டு வெளியேறியுள்ளது. நாளை நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்து, இந்தியா ஆப்கானிஸ்தானை வென்று, கடைசி சூப்பர் 4 போட்டியிலும் பாகிஸ்தான் அணி இலங்கையிடம் தோற்றால் மட்டுமே இந்தியாவுக்கு ரன்ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டி செல்ல வாய்ப்பு உள்ளது.