ஆசிய கோப்பையில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேத்தை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய நிலையில், நேற்று வங்கதேசமும், இலங்கையும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி, 184 ரன்களை இலங்கைக்கு இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து, இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர் பதும் நிசங்கா 20 ரன்களிலும், அசலங்கா 1 ரன்னிலும், குணதிலகா 11 ரன்னிலும், அதிரடி வீரர் பனுகா ராஜபக்சே 2 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தாலும், தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். அவருக்கு கேப்டன் சனகா நல்ல ஒத்துழைப்பு அளித்தார். 77 ரன்களில் சேர்ந்த இந்த ஜோடி 131 ரன்களில்தான் பிரிந்தது. 14.3 ஓவர்களில் இலங்கை அணி 131 ரன்களை எட்டியபோது அதிரடியாக ஆடிய குசல் மெண்டிஸ் முஸ்தபிஷிர் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 60 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஹசரங்கா 2 ரன்களில் அவுட்டானார். ஆனாலும், கேப்டன் தசுன் சனாகா தனி ஆளாக மறுமுனையில் போராடினார். இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்த சனாகா அணியின் ஸ்கோர் 158 ரன்களை எட்டியபோது மெஹிதி ஹாசன் பந்தில் அவுட்டானார். அவர் 33 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் கருணரத்னே அதிரடி காட்டினார். ஆனாலும், அவர் 19வது ஓவரின் 5வது பந்தில் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது.
முஸ்தபிஷிர் ரஹ்மானுக்கு ஏற்கனவே நான்கு ஓவர்கள் முடிந்துவிட்டதால், அனுபவமில்லாத மெஹிதி ஹாசன் கடைசி ஓவரை வீசினார். அவர் வீசிய முதல் 2 பந்துகளிலே டெயிலெண்டர் அசிதா பெர்னாண்டோ அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினார். இதனால், இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. குரூப் பி பிரிவில் ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இரண்டாவது அணியாக இலங்கை அணியும் தற்போது முன்னேறியுள்ளதால் வங்கதேச அணி தொடரை விட்டு வெளியேறுகிறது. குரூப் ஏ பிரிவில் இந்திய அணி பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளை வீழ்த்தி ஏற்கனவே சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.