ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் கோப்பையை ஜெயித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேசமயம், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சந்திக்கப் போகும் சவால்கள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் கூறுகையில், ”இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பலரும் பல்வேறு அணிகளை குறித்து பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி அனைத்து அணிகளையும் எதிர்த்து விளையாட தயாராக இருந்தாலும் என்னை பொறுத்தவரை இலங்கை அணிக்கு எதிராக விளையாடும் போது சற்று கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இலங்கை அணியும் மிக மிக ஆபத்தான அணிதான். சமீபத்தில் அவர்களது சிறப்பான ஆட்டம் தொடர்ச்சியாக வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆசிய கோப்பை தொடரில் இலங்கை அணி கோப்பையை வெல்லும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், இலங்கை அணி அதை செய்து காண்பித்தது. அதேபோல், இந்த தொடரில் யாராலும் கணிக்க முடியாத அணியாக இலங்கை அணி பலம் வாய்ந்த அணியாகவே உள்ளது. அந்த அணியில் சரியான கலவையில் வீரர்கள் உள்ளதால் நிச்சயம் பெரிய அணிகளுக்கு எதிராக அவர்கள் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில், இலங்கை அணியை இந்திய அணி சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அவர்களை கவனத்தோடு எதிர்கொள்ள வேண்டும்.
மேலும் அவர்கள் ஆசிய கோப்பையை வென்று அதே நம்பிக்கையுடன் தற்போது டி20 உலகக் கோப்பையை எதிர்கொள்வதால் அவர்களிடம் நல்ல தன்னம்பிக்கை இருக்கும். எனவே, அந்த அணியை குறைத்து மதிப்பிடாமல் இந்த சில விஷயங்களை எல்லாம் எண்ணத்தில் வைத்து கவனமாக விளையாட வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்.