FTX கிரிப்டோ கோப்பை ரேபிட் செஸ் போட்டியில் அமெரிக்க வீரரை தோற்கடித்து இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்தார்.
அமெரிக்காவின் மியாமியில் FTX கிரிப்டோ கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க வீரர் ஹான்ஸ் நீமனை எதிர்கொண்டார். கடுமையான சவால் அளித்த நீமனே வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் 64வது காய் நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். அந்த வகையில், 2.5-1.5 என்ற கணக்கில் அமெரிக்க வீரரை தோற்கடித்து, பிரக்ஞானந்தா தொடர்ச்சியாக 3-வது வெற்றியைப் பதிவு செய்தார்.
வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா கூறுகையில், ”இது வெற்றி பெற எளிதான வழியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், சற்று கடினமானதாகவே இருந்தது. எதிரணி வீரர் எப்போதும் சிறப்பாக விளையாடக் கூடியவர்” என்றார். சமீபத்தில் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய பி அணி வெண்கலப் பதக்கம் வென்றதில் முக்கிய பங்காற்றியவர் பிரக்ஞானந்தா. இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் நார்வே வீரர் மாக்ன்ஸ் கார்ல்சன்னுடன் பட்டியலில் நீடிக்கிறார் பிரக்ஞானந்தா.