16 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று, சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக தொடரையும் வென்று வரலாறு படைத்தது இந்தியா.
இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில், இந்த அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார். ரபாடா வீசிய முதல் பந்திலேயே ஓப்பனர் ராகுல் பவுண்டரி விளாசி இந்தியாவின் இன்னிங்சை அட்டகாசமாக துவக்கினார். அடுத்து பர்னெல் வீசிய 2-வது ஓவரில் ரோகித், ராகுல் இருவரும் பவுண்டரி விளாசி அசத்தி ஸ்கோரை மின்னல் வேகத்தில் உயர்த்த துவங்கினர்.
அடுத்து கேசவ் மகாராஜ். நார்ட்ஜே இருவரும் மாறி மாறி பந்துவீசிய போதும் இந்திய அணியின் வேகத்தை தடுத்து நிறுத்த தென் ஆப்பிரிக்காவால் முடியவில்லை. குறிப்பாக, நார்ட்ஜே வீசிய 8வது ஓவரில் 3 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 21 ரன்களை இந்த கூட்டணி சேர்த்தது. ஒருவழியாக ரோகித் விக்கெட்டை கேசவ் மகாராஜ் வீழ்த்த, அடுத்து கோலியுடன் இணை சேர்ந்த ராகுல், அதிரடியை தொடர்ந்து 24 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அடுத்த சில பந்துகளில் ராகுலும் விக்கெட்டை பறிகொடுக்க கோலியுடன் இணைந்தார் சூர்யகுமார் யாதவ்.
கோலி நிதானித்து ஆடத்துவங்க, அதிரடியை கையில் எடுத்த சூர்யகுமார், நாலாப்புறமும் பந்துகளை சிதறடித்து 18 பந்துகளில் அரைசதம் கடந்து மலைக்க வைத்தார். கோலியும் அதிரடிக்கு திரும்பி பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டு அசத்தினார். சூர்யகுமார் 61 ரன்கள் எடுத்த நிலையில், ரன் அவுட் ஆக, அடுத்து கோலியுடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். அவரும் தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு கடைசியில் எமனாக மாறி 7 பந்துகளில் 17 ரன்களை குவித்தார். ஒட்டுமொத்தமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது.
இதையடுத்து, 238 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, சஹார் வீசிய முதல் ஓவரில் ஒரு ரன் கூட குவிக்காமல் மெய்டன் ஆக்கியது. அடுத்து அர்ஸ்தீப் சிங் வீசிய 2வது ஓவரில் பவுமா, ரோசோவ் ஆகிய இருவரும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அடுத்து களமிறங்கிய டி காக் – மார்க்கரம் ஜோடி நிதானமாக விளையாடத் துவங்கியது. 33 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்கரம் விக்கெட்டை அக்சர் வீழ்த்த களத்திற்குள் நுழைந்தார் டேவிட் மில்லர்.
டிகாக் – மில்லர் கூட்டணியும் துவக்கத்தில் நிதான ஆட்டத்தை கையில் எடுத்த போதிலும், 10 ஓவர்களை கடந்த பின்னர் புயலாய் மாறிய மில்லர் பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டு இந்திய அணியை கலங்கடித்தார். 25 பந்துகளில் அரைசதம் கடந்து அரங்கை அதிர வைத்துக் கொண்டிருந்தார் மில்லர். இதையடுத்து, ஆமை வேக ஆட்டம் ஆடிக் கொண்டிருந்த டி-காக்கும் அதிரடியாக பவுண்டரி, சிக்ஸர்களாக விளாச துவங்கினார். 39 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய டிகாக் மில்லருக்கு பக்க பலமாக நின்றார்.
கடைசி இரு ஓவர்களில் 63 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அர்ஸ்தீப் சிங் வீசிய பந்துகளை சிக்ஸரும் பவுண்டரியுமாக மாற்றி கில்லராக மாறத் துவங்கினார். ஆனால், அந்த ஓவரில் 26 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு சதம் கடந்தார் மில்லர். இருப்பினும் அந்த ஓவரில் 20 ரன்களை மட்டும் இந்திய அணி விட்டுக் கொடுத்ததால், 16 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்று, சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக தொடரையும் வென்று வரலாறு படைத்தது இந்தியா.