ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணியை இந்தியா எதிர்கொள்கிறது.
ஆசிய கோப்பை தொடரில் முதல் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தச் சூழலில் இன்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க உள்ளது. இலங்கை அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இதனால், இலங்கை அணி நல்ல ஃபார்மில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் நடைபெற உள்ளதாக தெரிகிறது. அதன்படி, இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-க்கு பதிலாக தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தீபக் ஹூடாவிற்கு பதிலாக அணியில் அக்சர் பட்டேல் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இவர்கள் தவிர ரவி பிஷ்னோய்க்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்ப்பது தொடர்பாக அணி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதனால், அவர் அணியில் இடம்பிடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இலங்கை அணியை பொறுத்தவரை கடந்த இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றியை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராகவும் வெற்றி பெற முயற்சி செய்யும் என்று கருதப்படுகிறது.