இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.
3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா, 5 டி20 கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. முதல் டி20 ஆட்டத்தில் இந்தியாவும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றது. இந்நிலையில், 3வது ஆட்டம் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே அதிரடி காண்பித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 20 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மேயர்ஸ் அரை சதம் விளாசினார். கேப்டன் பூரன் 22 ரன்களும், போவெல் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஹெட்மயர் 20 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இவ்வாறாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 164 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. சென்ற ஆட்டம் போன்ற ரோஹித் சர்மா இந்த ஆட்டத்திலும் சோபிக்கவில்லை. அதேநேரம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் அதிரடி காண்பித்தார். 44 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரிகள் என 76 ரன்கள் எடுத்து சேஸிங்கிற்கு உதவினார். டொமினிக் டிராக்ஸ் வீசிய பந்தில் அவர் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். ஸ்ரேயஸ் ஐயர் 24 ரன்களிலும், ஹார்திக் பாண்டியா 4 ரன்களிலும் நடையைக் கட்ட, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 33 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை அடைந்தார்.
இவ்வாறாக 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி அடைந்தது. இந்த ஆட்டத்தில் அதிகபட்சமாக இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், வெஸ்ட் இண்டீஸ் அணியில் டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அரை சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டி20 ஆட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.