டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று முடிவில் இலங்கை, நெதர்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் வெளியேறின. சூப்பர் 12 சுற்றில் விளையாடும் 12 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. குரூப்-1 பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ் தான், இலங்கை அயர்லாந்து அணிகளும், குரூப்-2 பிரிவில் இந்தியா பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா , வங்காளதேசம் ஜிம்பாப்வே , நெதர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் நாடுகள் அரை இறுதிக்கு முன்னேறும். சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கியது. ஒரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 89 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. ஹோபர்ட்டில் இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் குரூப்-1 பிரிவில் உள்ள இலங்கை-அயர்லாந்து அணிகள் மோதின.
அயர்லாந்து கேப்டன் பால்பிரீன் ‘டாஸ்’ வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அவரும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரிலேயே அயர்லாந்து அணியின் தொடக்க ஜோடி பிரிந்தது. பால்பிரீன் ஒரு ரன்னில் லகிரு குமாரா பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பால் ஸ்டிர்லிங்குடன் டக்கர் ஜோடி சேர்ந்தார். இலங்கை வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சால் அயர்லாந்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுக்க முடிந்தது.
இதையடுத்து, 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. இலங்கை 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் ஆட்டத்தில் குரூப்-2 பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.