புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பதினோறு ஆண்டுகளாக பெண் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்து வருகின்றார்.
புனேவைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேஷ். பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வரும் இவர், பல்வேறு சேவையையும் செய்து வருகின்றார். அந்த வகையில் இவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு பெண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. கடந்த 11 ஆண்டுகளாக இவர் இந்த சேவையை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஆறு கோடி பெண் சிசுக்கொலைகள் அரங்கேறி உள்ளது. இது போன்ற கொடுமைகள் குறிப்பிட்ட நாடு, மாநிலம், நகரம் சார்ந்தது அல்ல உலகம் முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது என அவர் தெரிவித்தார். இது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், ’’எங்கள் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பிறக்கும்போது பல குடும்பத்தினர் குழந்தையை வந்து பார்க்க கூட தயக்கம் காட்டுகின்றனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம் எனவே பெண் குழந்தைகளை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தோம். இதனால் பெண் குழந்தைகளை காப்போம் என்று திட்டத்தை தொடங்கி பெண் குழந்தைகள் பிறந்தால் சம்மந்தப்பட்ட குடும்பத்தினரிடம் மருத்துவ கட்டணம் வசூலிப்பதில்லை. கடந்த 11 ஆண்டுகளில் 2,400 பெண் குழந்தைகளை இலவசமாக பிரசவித்துள்ளோம்’’ என்று அவர் பெருமிதம் கொள்கின்றார்.
பெண் குழந்தை பிறந்து பிரசவித்த தாய்மார்கள் வீடு திரும்பும்போது அவர்களுக்கு கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைப்பதை இந்த மருத்துவர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.