இந்தியாவுக்கு எதிரான 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அதிரடியாக வெற்றி பெற்றது தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்றைய தினம் இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி, ப்ரோவர்ட் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது.
இதையடுத்து, முதலில் விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் நிகோலஸ் பூரன், பிராண்டன் கிங் இருவரும் அதிரடியாக விளையாடினர். 12.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்திருந்தபோது, மோசமான வானிலையால் ஆட்டம் தடைபட்டது.
அரை மணிநேரத்திற்குப் பின் போட்டி மீண்டும் தொடங்கியது. இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பிராண்டன் கிங் ஆட்டமிழக்காமல் 85 ரன்கள் எடுத்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 3 – 2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.