சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இருந்து ஒட்டுமொத்தமாக இந்திய வீராங்கனைகள் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் SDAT மைதானத்தில் ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கர்மன் தண்டி, ருதுஜா போஷாலே ஜோடி, கனடாவின் தாப்ரோஸ்கி, பிரேசிலின் லூசியா ஸ்டேபனி ஜோடியுடன் மோதியது. முதல் சுற்றில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய தாப்ரோஸ்கி, லூசியா ஸ்டேபனி ஜோடி, இந்திய இணையை 6-0, 6-3 என பதம் பார்த்தது. இந்நிலையில் 2-0 என வீழ்ந்த கர்மன் தண்டி, ருதுஜா போஷாலே இணை சென்னை ஓபன் தொடரில் இருந்து வெளியேறினர். அதேசமயத்தில் சென்டர் கோர்ட் மைதானத்தில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டங்களில், முதல் சுற்றில், போலந்து வீராங்கனை மேக்டா லினெட், ரஷ்யாவின் செலேக்மெடேவா ஒக்சனாவை 6-2, 6-0 என வீழ்த்தி 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இரண்டாம் சுற்றில், ரஷ்யா வீராங்கனை அனஸ்டாசியா கசனோவாவை, ஜெர்மனியை சேர்ந்த கேட்டி ஸ்வான் 7-6, 6-2 என வீழ்த்தி 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் . மூன்றாம் சுற்றில், அர்ஜென்டினாவின் பொடோரோஸ்கா நதியா, ஜெர்மனியின் மரியா தட்ஜானாவை 6-3, 6-2, 7-6 என கைப்பற்றி டை பிரேக்கரில் 2-1 என்ற செட் கணக்கில் அபாரமாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
நான்காம் சுற்றில், ரஷ்யாவின் வரவரா கிரசேவா, கனடாவின் ஜாவோ கரோல்-ஐ 6-1, 7-5 என வீழ்த்தி 2-0 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மேலும் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி போட்டிகளில், கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி, லூயிசா ஸ்டெபானி ஜோடியும், அன்னா பிளிங்கோவா, நடேலா டிசலமிட்ஸே ஜோடியும், பேங்க்டிரன், மொயுகா உச்சிஜிமா ஜோடியும், யூஜெனி பவுச்சார்ட், யானினா விக்மேயர் ஜோடி ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இதனிடையே, இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து தோல்வியுற்று, சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும், சுவாரஸ்யமான போட்டிகளால் மற்ற நாட்டு வீராங்கனைகளுக்கான ஆதரவாளர்களாக சென்னை ரசிகர்கள் மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.