ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பத்திரிகையாளரின் செல்போனை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் விஸ்வரூப வெற்றி பெற்று 6வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக துபாய் சர்வதேச மைதானத்தில் இருந்து வெளியேறிய ரமீஸ் ராஜாவை சுற்றிவளைத்த பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது, ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் அணியின் தோல்வியால் மனமுடைந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரிடம் இருந்து ஏதேனும் செய்தி இருக்கிறதா? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கேள்வியால் குழப்பமடைந்து பத்திரிகையாளரை எதிர்த்தார். பத்திரிகையாளர் அவரை குளிர்விக்க முயன்றபோது, அமைதியடையாத மனநிலையில் இருந்த ரமீஸ் ராஜா, வீடியோ பதிவு செய்வதை நிறுத்தும் முயற்சியில் பத்திரிகையாளரின் தொலைபேசியை பிடித்தார். இதையடுத்து பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த வைரலான சம்பவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பத்திரிகையாளர்கள் மத்தியிலும் கிரிக்கெட் ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.