நீண்ட வருடங்களுக்குப் பின் சச்சின் டெண்டுல்கரை பேட்டும் கையுமாக பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
இந்தியாவில் தற்போது சாலை பாதுகாப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என 8 நாடுகளை சேர்ந்த முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்திய லெஜெண்ட்ஸ் அணியை சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ஒத்திவைக்கப்பட்டது. மத்தியப்பிரதேசத்தில் நேற்று நடந்த 3வது போட்டியில் ராஸ் டெய்லர் தலைமையிலான பிளாக் கேப்ஸ் அணியுடன் மோதியது இந்திய லெஜெண்ட்ஸ். இதில், டாஸ் வென்று இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது பிளாக் கேப்ஸ்.
இதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக நமன் ஓஜாவுடன் களத்திற்கு வந்தார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் ஸ்டேடியத்துக்குள் நுழைந்ததும் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவர் தனது வழக்கமான மாஸ்டர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் சச்சின் 18 ரன்களை எடுத்த நிலையில், மழை காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் இந்திய லெஜண்ட்ஸ் அணி 5.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 49 ரன்கள் எடுத்திருந்தது. நீண்ட வருடங்களுக்குப் பின் சச்சின் டெண்டுல்கரை பேட்டும் கையுமாக பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். இந்த போட்டியில் சச்சின் அடித்த ஷாட்களை பலரும் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் இந்த வயதிலும் சச்சின் டெண்டுல்கர் தனது வழக்கமான ஷாட்டுகளை ஆடி வருவதை கண்டு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.