விபத்திற்கு பின்னர் முதன்முறையாக ரிஷப் பண்ட் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த மாதம் 30ஆம் தேதி கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயம் அடைந்த அவர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் உதவியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேராடூன் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, விமானம் மூலம் மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பண்ட், அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தின்போது மூட்டில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்டிற்கு 3 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றில் 2 ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. அடுத்ததாக 6 வாரங்கள் கழித்து மேலும் ஒரு ஆப்ரேஷன் செய்ய வேண்டியுள்ளது.
இந்நிலையில், விபத்திற்கு பின்னர் முதன்முறையாக ரிஷப் பண்ட் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எனக்கு ஆதரவு அளித்து உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பணிவுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பிசிசிஐ, ஜெய் ஷா, அரசு அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. என்னுடைய ரசிகர்கள், அணி வீரர்கள், மருத்துவர்களுக்கும் நன்றி. விரைவில் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதை எதிர்பார்த்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.