பிரேசில் நாட்டைச் சேர்ந்த கால்பந்து உலகின் ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வயது 82.
புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான பீலேவுக்கு மருத்துவமனையில் கிமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெருங்குடல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட நிலையில், அவருக்கு கிமோதெரப்பி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பிலேவின் மகள் கெலி நசிமென்டோ இன்ஸ்டாகிராமில் கூறுகையில், “தந்தை பீலே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அபாயமான சூழலில் இல்லை. உங்கள் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கால்பந்து உலகின் தலை சிறந்த வீரராக கருதப்படுபவர் பீலே. 1958, 1962, 1970 என மூன்று உலகக் கோப்பையில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். இரண்டுக்கும் மேற்பட்ட உலகக் கோப்பைகளை வென்ற ஒரே வீரர் இவரே. அதேபோல், இவர் மொத்தமாக 1,000க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து சாதனைப் படைத்துள்ளார். 1977ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பீலே, வயது மூப்பு காரணமாக அன்மை காலமாக பொதுவெளியில் தோன்றுவதில்லை. இருப்பினும், 2022 உலகக் கோப்பையை பிரேசில் வென்று நமது நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அணிக்கு வாழ்த்து செய்தி கூறியுள்ளார். பிரேசில் அணியும் முதல் 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.