வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே கடந்த 4ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியானது டாக்கா மைதானத்தில் இன்று துவங்கி நடைபெற்றது. அப்போது பீல்டிங் செய்யும்போது ரோஹித் ஷர்மா, முகமது சிராஜ் பநதுவீச்சில் அனாமுல் ஹக் அடித்த பந்து, ஸ்லிப்பை நோக்கி பறந்தது. அப்போது பந்தை பிடிக்க முயன்ற போது, ரோகித் சர்மாவின் கையில் பந்து வேகமாக பட்டு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து ரோகித் சர்மா வலியால் போட்டியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு ரோகித் சர்மா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பு முறிவு ஏதேனும் உள்ளதா என்பதை கண்டறிய எக்ஸ்ரே செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.