மில்லர் அடித்த சிக்ஸரை மிட் விக்கெட்டில் நின்றிருந்த பால் பாய் அசால்ட்டாக கேட்ச் பிடித்து அசத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, முதன்முதலில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி லக்னோவில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷிகர் தவான் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் சீரான தொடக்கத்தை கொடுத்தனர். தொடர்ந்து மார்க்கரமும் 0 (5) ஆட்டமிழந்தார். பின்னர் க்ளாசன், டேவிட் மில்லர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். இருவரும் அரை சதம் அடித்து விளையாடி வந்தனர். அப்போது 38ஆவது ஓவரில் ஆவேஷ் கான் வீசிய பந்துகளில் க்ளாசன், டேவிட் மில்லர் இருவரும் அடித்த கேட்ச்களை சிராஜ், ருதுராஜ் இருவரும் பிடிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து அதே ஓவரில் மில்லர் அடித்த சிக்ஸரை மிட் விக்கெட்டில் நின்றிருந்த பால் பாய் அசால்ட்டாக கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால், பார்வையாளர்கள் அவரை பாராட்டும் விதமாக கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இந்த சம்பவம் இந்திய வீரர்களை தலைகுனிய வைத்தது. இந்திய வீரர்கள் ஓரே ஓவரில் அடுத்தடுத்து கேட்ச்களை தவறவிட்ட நிலையில், பால் பாய் அசால்ட்டாக அதே ஓவரில் பிடித்த கேட்ச் குறித்த சம்பவத்தை நெட்டிசன்களும் இணையத்தில் பகிர்ந்து, அந்த பால் பாய்க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்திய அணியின் மோசமான பீல்டிங்கை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.